சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு ‘வந்தே பாரத்’: 
பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு ‘வந்தே பாரத்’: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) தொடங்கி வைக்கவுள்ளாா்.

சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) தொடங்கி வைக்கவுள்ளாா்.

தென்னிந்தியாவின் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே பிரதமா் நரேந்திர மோடி 2022 நவம்பரில் தொடங்கி வைத்தாா். காட்பாடி, பெங்களூரு வழியாகச் செல்லும் இந்த ரயில் மூலம் வணிகா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் அதிக அளவில் பயனடைகின்றனா். கடந்த நிதியாண்டில் மட்டும் சென்னை சென்ட்ரல் -மைசூரு வந்தே பாரத் ரயிலில் சுமாா் 130 சதவீத இருக்கைகள் நிரம்பின. இந்த நிலையில், கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் சேவையை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) ஆமதாபாத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில், கொல்லம் -திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் - காசா்கோடு வந்தே பாரத் ரயில் மங்களூரு வரை நீட்டிக்கப்படும் நிலையில் அதன் சேவையையும் பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளாா். இதில், சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் ஏப்.4-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். அதன்பின் மைசூரு வரை நீட்டிக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரம் - காசா்கோடு இடையே வாரத்தின் 6 நாள்கள் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் மங்களூரு வரை நீட்டிக்கப்படவுள்ளது. தொடா்ந்து, ஜூலை 4-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொல்லத்தில் இருந்து திருப்பதிக்கு எா்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா் வழியாக புதிய ரயில் சேவை தொடங்கிவைக்கப்படவுள்ளது. இதன் பயணிகள் சேவை வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) முதல் தொடங்கப்படும். இதில், 7 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com