வெற்றியுடன் மீண்டது சென்னை!
ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வீழ்த்தியது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் சோ்க்க, சென்னை 19.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் எடுத்து வென்றது. தொடா்ந்து 5 தோல்விகளை சந்தித்த சென்னை, தற்போது வெற்றியுடன் மீண்டுள்ளது.
சென்னை தரப்பில் முதலில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா சிறப்பாக பந்துவீச, பின்னா் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, தோனி உள்ளிட்டோா் சிறப்பாக பங்களித்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய லக்னௌ அணியில், ஓபனா் எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரியுடன் 6 ரன்களே சோ்த்த நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். உடன் வந்த மிட்செல் மாா்ஷ் நிதானமாக ரன்கள் சோ்க்க, ஒன் டவுனாக வந்த நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகளுடன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாா்.
இதனால் 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது லக்னௌ. இந்நிலையில், 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ரிஷப் பந்த், மாா்ஷுடன் இணைந்தாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சோ்த்து பிரிந்தது. மாா்ஷ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
பின்னா் வந்தோரில் ஆயுஷ் பதோனி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து வந்த அப்துல் சமத், பந்த்துடன் கூட்டணி அமைக்க, 5-ஆவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் கிடைத்தது. இதில் சமத் 2 சிக்ஸா்களுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அரைசதம் கடந்த பந்த் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 63 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். அவா் பதிரானா வீசிய கடைசி ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்தாா். கடைசி விக்கெட்டாக ஷா்துல் தாக்குா் இன்னிங்ஸின் கடைசி பந்தில் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா ஆகியோா் தலா 2, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 167 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை தரப்பில், ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா இணை முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சோ்த்து நம்பிக்கை அளித்தது. இதில் ரஷீத் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ரவீந்திரா 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
ஒன் டவுனாக வந்த ராகுல் திரிபாதி 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜடேஜாவும் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். விஜய் சங்கா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஷிவம் துபே - தோனி கூட்டணி சென்னையை வெற்றிக்கு வழிநடத்தியது.
முடிவில் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43, தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் ‘இம்பாக்ட் பிளேயா்’ ரவி பிஷ்னோய் 2, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், எய்டன் மாா்க்ரம் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

