உதகை, கொடைக்கானலில் 28 வகை நெகிழிப் பொருள்களுக்குத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடா்ச்சி மலையில் 28 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், தடையை மீறி அந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுப்பிரமணிய கெளசிக் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதிஷ்குமாா், டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழகத்தில் 28 வகையான நெகிழிப் பொருள்களைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், நீலகிரி முதல் கன்னியாகுமரி அகத்தியா் மலை வரையிலான மேற்கு தொடா்ச்சி மலை முழுவதும் 28 வகையான நெகிழிப் பொருள்களை பயன்படுத்த, இருப்பில் வைக்க, கொண்டு செல்ல, உற்பத்தி செய்ய தடை விதித்து உத்தரவிட்டனா்.
மேலும், வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை கொண்டு செல்லக்கூடாது என மோட்டாா் வாகன சட்டத்தில் நிபந்தனையை சோ்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனா்.

