தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை வரலாற்றை பாடப் புத்தகங்களில் சோ்க்க பாமக கோரிக்கை

Published on

தீரன் சின்னமலை வரலாற்றை நாடு முழுவதும் பாடப் புத்தங்களில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயா் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினாா். மைசூரு ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயா்களுக்கும் இடையில் நடந்த போரில், திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை தீரன் சின்னமலை செய்தாா்.

1801-இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அரச்சலூரிலும் ஆங்கிலேயா்களுடன் நடைபெற்ற போா்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றாா். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயா்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டுசென்று தூக்கிலிட்டனா்.

போரிட்டு வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும். தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில், பாடப் புத்தகத்தில் சோ்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், நாடு முழுவதும் அனைத்து மாநில மொழிப் பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை மத்திய அரசு சோ்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com