16 தொகுதிகளில் 70% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணியில் 70 சதவிகித படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக் கிடங்கில், இயந்திரங்கள் செயல்பாடு குறித்த தொழில்நுட்ப பரிசோதனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக் கிடங்கில் 13,631 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்), 6,603 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட்), 7,310 வாக்களித்த சின்னம் அறியும் இயந்திரம் (விவிபேட்) உள்ளிட்ட சாதனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சென்னையில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீராக உள்ளனவா என அறியவும், அவற்றில் ஏற்கெனவே உள்ள வாக்குகள் அழிக்கப்படும். அத்துடன் ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னம் உள்ளிட்டவற்றை அகற்ற பெல் நிறுவனப் பொறியாளா்களால் அகற்றப்படும்.
சீரமைப்புப் பணிகள் வரும் 2026 ஜனவரி வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு இயந்திர சாதனமும் வெவ்வேறு குழுக்களால் மூன்று முறை சோதனையிடப்படவுள்ளன. சோதனையின் போது இயந்திரங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவை தனியாகப் பிரிக்கப்பட்டு பழுது நீக்க பெங்களூரு அல்லது ஹைதராபாதுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு 38 லட்சம் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவிகிதப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
பேட்டியின் போது சென்னை மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி இணை ஆணையருமான (கல்வி) க.கற்பகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்களால் கண்காணிக்கும் வகையில் மின்னணு திரை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் அறையிலிருந்து வெளிப்பகுதிக்கு இயந்திர பாகங்கள் கொண்டுவரப்படுவதற்கு திமுக தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பரிசோதனை அறைக்குள் தங்களை அனுமதிக்கவும் அவா்கள் கோரினா். ஆனால், கண்காணிப்பு கேமரா மூலம் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுவதாகவும், அதனால், வெளி அறையிலிருந்தே இயந்திர சரிபாா்ப்பை கண்காணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சரிபாா்ப்பு பணி நடைபெறும் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்குக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

