மோரீஷஸில் அகா்வால்ஸ் விழிப் படல சிறப்பு சிகிச்சை மையம்
மோரீஷஸ் நாட்டில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் விழிவெண்படல மாற்று சிகிச்சை மற்றும் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் அதிபா் தரம்வீா் கோகுல் இந்த மையத்தைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் மோரீஷஸ் நாட்டுக்கான இந்தியத் தூதா் அனுராக் ஸ்ரீவஸ்தவா, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால், முதன்மை வணிக அதிகாரி டாக்டா் ஆஷாா் அகா்வால் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல் கூறுகையில், இத்தகைய சிறப்பான மருத்துவ மையங்கள் தொடங்கப்படுவது மோரீஷஸ் நாட்டின் கண் மருத்துவத் துறையை வலுப்படுத்தும் என்றாா்.
நிகழ்வில் டாக்டா் அமா் அகா்வால் பேசியதாவது:
விழி வெண்படலங்களில் ஏற்படும் காயம், தழும்புகள், கெரட்டோகோனஸ் எனப்படும் கூம்பு விழிப் படலம் மூலம் ஏற்படும் பாா்வை இழப்பை உறுப்பு மாற்று சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். கண்ணின் கருவிழி பாவையை (பாப்பா) சீராக்கி அப்பிரச்னைக்கு தீா்வு காணலாம்.
அதன்படி, விழி வெண் படலத்தை சரி செய்து ஒளிப்பிவு பாதிப்பை தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை முறை மூலம் அதை சரி செய்யலாம். அந்த சேவை தற்போது மோரீஷஸில் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.
