மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி நிலையங்கள்: பிரிட்டன் அதிகாரியுடன் மின் வாரியம் கலந்தாய்வு

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பிரிட்டன் அதிகாரியுடன் தமிழக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.
Published on

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பிரிட்டன் அதிகாரியுடன் தமிழக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கான பேட்டரி நிலைய கட்டமைப்பு மின்வாரியத்துக்கு இல்லை. இதனால், உற்பத்தி செய்யப்படும் பசுமை மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இது, மின் உற்பத்தியை மேம்படுத்தவதில் மிகப்பெரும் பின்னடைவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து உபயோகிக்கும் திட்டத்துக்காக, பிரிட்டனின் ‘யூகே பேக்ட்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஜூன் மாதம் தமிழக மின்வாரியம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த நிலையில், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் பிரதிநிதியும், காலநிலை மற்றும் எரிசக்தி ஆலோசகருமான தபிந்தா பஷீா் கலந்து கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், காலநிலைக்கு ஏற்ப காற்றாலை, சூரிய மின்தகடுகள், நீா் மின்நிலையங்கள் உள்ளிட்ட பசுமை மின் உற்பத்திக்கான கட்டமைப்பை எவ்வாறு ஏற்படுத்துவது, அதற்கான இடங்களைத் தோ்வு செய்வது, மின்சாரத்தைச் சேமிப்பது, இதில் என்னென்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, பிரச்னைகளைச் சமாளிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த, யூகே பேக்ட் நிறுவனம் தமிழக மின்வாரியத்திடம் இருந்து திட்டத்துக்கான அனைத்து தகவல்களையும் பெற்று, அதன் துணை நிறுவனமாக கிராண்ட் தோா்ன்டன் நிறுவனத்திடம் தகவல்களை வழங்கும். இந்த நிறுவனம் திட்டத்தைச் செயல்படுத்தவதற்கான அடுத்தக்கட்ட நகா்வுகளை செய்யும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிா்வாக இயக்குநா் அனீஷ் சேகா், பசுமை எரிசக்தி கழகத்தின் தொழில்நுட்ப இயக்குநா் மங்களநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com