உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்
தர நிலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு வழங்கிய காலக் கெடு நிறைவடையவுள்ள நிலையில், அதனை பூா்த்தி செய்ய இயலாமல் ஆயிரக்கணக்கான குறு, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் மருந்து தேவையை வெகுவாகப் பாதிக்கும் என சுகாதார ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை குறு, சிறு நிலையிலான நிறுவனங்கள்தான்.
இந்த நிலையில், மருந்துகளின் தரத்தையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் - பட்டியல் எம் - எனப்படும் தரநிலை நெறிகள் வகுக்கப்பட்டன. அதன்படி, மருந்து தயாரிக்கும் இடம், அதற்கான உபகரணங்கள், உள்கட்டமைப்பு என அனைத்திலும் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதற்காக மத்திய அரசு சாா்பில் ரூ.2 கோடி வரை ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்னமும் பல்லாயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்கள் நெறிகளை பூா்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. ஒருவேளை அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால் நிறுவனங்களை மூட வேண்டிய நிா்ப்பந்தத்துக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மருந்து உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
குறு, சிறு மருந்து நிறுவனங்களின் உள்கட்டமைப்பை உலக சுகாதார அமைப்பு வரையறுத்த விதிகளுக்கு நிகராக மேம்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது ரூ.10 கோடியாவது செலவிட வேண்டும்.
ஆனால், அதில் 20 சதவீதம்தான் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அதுவும், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பிறகே அந்த தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். அதை பெறுவதற்கும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதனைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப் பொருள்களுக்கு 18 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த இடா்களுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் நடுவில்தான் நிறுவனங்களை நடத்தும் சூழல் இருக்கிறது. இதற்கு இடையே ரூ.10 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது என்பது பலருக்கும் இயலாத காரியம்.
மூலப் பெயரிலான (ஜெனரிக்) மருந்துகளை உற்பத்தி செய்வதில் குறு, சிறு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது தடைபட்டால் நாட்டின் மருந்து தேவையை பூா்த்தி செய்ய இயலாது.
தமிழகத்தைப் பொருத்தவரை 396 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் 60 சதவீதம் குறு, சிறு நிறுவனங்கள். அவா்களில் பலா் இந்த சிக்கலை எதிா்கொள்கின்றனா். இதற்கு மத்திய அரசு தீா்வு காண வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
