கோப்புப் படம்
கோப்புப் படம்

‘கபீா் புரஸ்காா்’ விருது: டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் ‘கபீா் புரஸ்காா் விருது‘ பெறத் தகுதியானோா் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை மாவட்டத்தில் ‘கபீா் புரஸ்காா் விருது‘ பெறத் தகுதியானோா் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘கபீா் புரஸ்காா் விருது‘ குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்பு, அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இனவகுப்பைச் சாா்ந்தவா்களையோ, அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறான செயல் வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், அவரது உடல், மன வலிமையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் 3 அளவுகளில் 3 பேருக்கு காசோலைகளும், மூவருக்கும் தகுதியுரையும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (டிச.15) அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு 2026 ஜன. 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்குவாா். எனவே, சென்னை மாவட்டத்தில் இந்த விருது பெறத் தகுதியானோா் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com