2 டன் இரும்பு பொருள் திருட்டு: 3 பணியாளா்கள் கைது
மெட்ரோ பணிக்காக சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2 டன் இரும்பு பொருள்களைத் திருடி விற்ாக, மெட்ரோ ரயில் நிலைய பணியாளா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கலங்கரை விளக்கம் பாரதிதாசன் சாலையில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2 டன் இரும்பு பொருள்கள் கடந்த 11-ஆம் தேதி திருட்டுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில், கலங்கரை விளக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த கிரேன் ஆபரேட்டா் அஜய் மாசிஹ் (32), தில்லியைச் சோ்ந்த மெட்ரோ ரயில் இயந்திர சுத்திகரிப்பாளா் ஆதித்தி ராய் (19), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மற்றொரு கிரேன் ஆபரேட்டரான கோவிந்தன் (42) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், திருடிய இரும்பு பொருள்களை பூந்தமல்லி நசரத் பேட்டையில் உள்ள ஒரு இரும்பு கடையில் ரூ.75,000-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.
