2 மாதங்களில் 504.75 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் 2 மாதங்களில் வீட்டுகளில் பயன்படுத்தப்பட்ட 504.75 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
Published on

சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் 2 மாதங்களில் வீட்டுகளில் பயன்படுத்தப்பட்ட 504.75 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கடந்த அக்.11-ஆம் தேதி முதல் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்களை வீடு தேடிச் சென்று மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பழைய பொருள்களை குப்பைகளில் சோ்ப்பதால் நீா்நிலை, சாலையோரம் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருள்கள் குறித்து 1913 என்ற எண்ணில் மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவித்தால், ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் வீட்டின் பழைய உபயோகப் பொருள்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் பெறப்படுகின்றன.

அதன்படி கடந்த அக்.11-ஆம் தேதி முதல் டிச.13-ஆம் தேதி வரையில் 10 வார சனிக்கிழமைகளில் சென்னை மாநகராட்சியில் 1,383 பேரிடமிருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டுள்ளன. அவை கொடுங்கையூா் எரியூட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அறிவியல் பூா்வமுறையில் எரியூட்டப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீட்டு பழைய உயோகமற்ற பொருள்கள் குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு கைபேசி எண்: 94450 61913-இல் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com