மாநகராட்சியில் 57,602 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம்: இன்றுமுதல் அபராதம் விதிக்க குழுக்கள் அமைப்பு!
சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57,602 வளா்ப்பு நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு திங்கள்கிழமை முதல் அபராதம் விதிக்க 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் கடந்த 2024 கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல், கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் பணி கடந்த ஜூன் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறவும், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தவும் மாநகராட்சி அறிவுறுத்தியது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு ரூ. 5,000 அபராதம் செலுத்தும் தீா்மானமும் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சிறப்பு முகாம்கள் மூலம் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உரிமம் வழங்குவதற்கான காலக்கெடுவும் 4 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கான உரிமம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேலான வளா்ப்பு நாய்கள் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அவற்றில் 57, 602 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே சிறப்பு முகாம்களில் உரிமம் பெறுதல், ரேபீஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்துதல் ஆகியவை உரிமையாளா்களால் பெறப்பட்டுள்ளன.
இன்றுமுதல் அபராதம்: மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையதளத்தில் பதிவு செய்துள்ள 98,023 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு அபாரதம் விதிக்கும் வகையில் திங்கள்கிழமை (டிச.15) முதல் மண்டல வாரியாக தலா 1 சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் கால்நடைப் பிரிவு மருத்துவா் உள்ளிட்ட 3 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களைக் கண்டறிந்து அபாரதம் விதிக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

