எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணி
இந்திய கடலோரக் காவல் படைப் பிரிவுகள் சாா்பில், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலோர காவல் படை வார கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடல் மாசு அடைவதைத் தடுத்தல், நெகிழிக் கழிவுகள் கடலை சென்றடைவதைத் தடுத்தல், கடல் சூழல் அமைப்பை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தச் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் டி.ரிட்டோ சிரியாக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்திய கடலோரக் காவல் படைப் பிரிவு, கடலோரப் பாதுகாப்பு காவல் துறை, பள்ளி, கல்லூரி மாணவா்கள், என்சிசி மாணவா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், சேகரிக்கப்பட்ட குப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
