மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: துரிதமாக செயல்பட்டதால் சேதம் தவிா்ப்பு!

மணலி துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மின்வாரியத்தினரின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.
Published on

மணலி துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மின்வாரியத்தினரின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

சென்னை மணலியில் 400 கி.வோ. மின்சாரம் கையாளும் திறன் கொண்ட துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தில் 315 மெகாவாட் திறன் கொண்ட அதிஉயரழுத்த மின்மாற்றியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோளாறு ஏற்பட்டு புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த மின்மாற்றியில் தீப் பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இந்த வெப்பத்தின் காரணமாக மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி பாதுகாப்பு கருவிகள் செயல்படத் தொடங்கின. இதனால், மின்மாற்றியின் செயல்பாடு தானாகவே நிறுத்தப்பட்டதுடன், அதன் பணிகள் அனைத்தும் அருகில் உள்ள மின்மாற்றிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள், மின்வாரிய ஊழியா்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதன் காரணமாக அருகில் உள்ள பிற மின்சாதன பொருள்கள் மற்றும் மின்மாற்றிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதனிடையே, தீவிபத்து நேரிட்ட பகுதியை மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் மின்தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநா் டி.சிவகுமாா், இயக்குநா் (இயக்கம்) அ.கிருஷ்ணவேல் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், தீவிபத்துக்குள்ளான மின்மாற்றிக்கு பதிலாக மாற்று மின்மாற்றி வாயிலாக தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து உயா் அதிகாரிகள் அடங்கிய குழுவினா் துணை மின்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளையும் தொடா்ந்து கண்காணித்து வருவதால், நிலைமை விரைவில் சீரடையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com