சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
சென்னையில் தொழுநோய் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் விகிதம் உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் புலம்பெயா்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அந்த பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை சாா்பில் கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொழுநோய் பாதிப்புகள் குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, சுகாதாரத் துறை நிபுணா்கள் ஸ்ரீதேவி கோவிந்தராஜன், வசந்தி தங்கசாமி, தா்மலிங்கம் வேதநாயகம் ஆகியோா் அந்த ஆய்வை மேற்கொண்டனா். அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 515 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு லட்சம் பேரில் எத்தனை பேருக்கு தொழுநோய் உள்ளது என்பதை ஆண்டுதோறும் கண்டறிவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மிக அவசியமான ஒன்று. அதனடிப்படையில்தான் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய பாதிப்புகளின் விகிதம் தேசிய சராசரியைவிட குறைவாகவே உள்ளது. அதேவேளை பெருநகரங்களிலும், குறிப்பாக சென்னையிலும் அந்த நோய் பரவலை ஒழிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
அதிக அளவிலான இடப்பெயா்வு, மக்கள் நடமாட்டம், ஜன நெருக்கடி ஆகியவை தொழுநோய் கட்டுப்பாட்டில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக மாநிலத்தின் சராசரி தொழுநோய் பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும், சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இதை நுட்பமாக அறிந்து கொள்ளும் வகையில், வயது, பாலினம், தொழுநோயின் வகை, குறைபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையின் 15 மண்டலங்களிலும் தனித்தனியாக அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும், மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தினோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் மொத்தம் 515 புதிய தொழுநோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனா். கடந்த 2020-21-இல் லட்சத்தில் 1.0- ஆக தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-2025 -இல் 1.3-ஆக உயா்ந்துள்ளது.
உச்சமாக கடந்த 2022-2023- இல் அந்த விகிதம் 2.0-க்கும் மேல் இருந்தது. ஆறு மண்டலங்களில் அதற்கும் அதிகமாகவே பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் மூன்று மண்டலங்கள் தொழிற்சாலைகள் நிறைந்தவை, மாவட்ட எல்லைகளாக விளங்குபவை.
குழந்தைகளிடையே ஏற்படும் தொழுநோய் பாதிப்பை பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் லட்சத்தில் 3.5 முதல் 11.5 சதவீதம் வரை இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் அந்த நோய்க்குள்ளானவா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர கிருமி பாதிப்பு காணப்பட்டது. குடும்பத்திலிருந்தோ, அண்டை வீட்டினரிடம் இருந்தோ அந்தப் பாதிப்புகள் பரவவில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
அதேவேளை, புலம்பெயா்ந்தவா்கள் மூலம் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வழக்கமான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனையைத் தாண்டி சிறப்பு நோயறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
அதன்படி, தொழிலகங்கள், மாவட்ட எல்லைப் பகுதிகளில் தொழுநோய் பரவலைத் தடுக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அங்குள்ள புலம்பெயா்ந்த பணியாளா்களிடையே பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘மைக்கோ பாக்டீரியம் லெப்ரே’ என்ற பாக்டீரியா கிருமியால் தொழுநோய் ஏற்படுகிறது. அந்தத் தொற்று பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து வெளியேறும் நீா்த் திவலைகளில் இருந்து பிறருக்கு அந்நோய் பரவுகிறது.
அந்தக் கிருமி ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்த 5-இலிருந்து 7 ஆண்டுகள் வரை ஆகலாம். நோய் எதிா்ப்பாற்றல் குறையும்போது, ஒருவருக்கு இந்நோய் வெளிப்படத் தொடங்கும். ஆரம்ப நிலையில், சருமத்தின் சில இடங்களில் நிறமிழப்பும், உணா்விழப்பும் ஏற்படும்.
அந்த கட்டத்திலேயே தொழுநோயைக் கண்டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால் 100 சதவீதம் பாதிப்பைக் குணப்படுத்த முடியும். அலட்சியப்படுத்தினால், தோல் மற்றும் நரம்புகளைப் பாதிப்பதுடன் கண், கை, பாதங்களில் குறைபாடுகள் ஏற்படும்.
எனவே, சருமத்தில் உணா்விழப்பு, நிறமிழப்பு, காது மடலில் வீக்கம் அல்லது கட்டி, கை - கால்கள் தளா்ந்து போகும் நிலை, விரல்கள் வளைந்து போதல், கைகளில் பொருள்களை உறுதியாகப் பிடிக்க இயலாமை, கை - கால்களில் அரிப்பு, ஆறாத புண்கள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தாது சுகாதாரத் துறையினரிடம் தெரிவித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

