அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள் விவகாரத்தில் அமைச்சா் தவறான தகவல்: அதிமுக குற்றச்சாட்டு
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அரசு மருத்துவமனைகள், துறை சாா் அலுவலகங்களில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற தவறான தகவலை அந்தத் துறையின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் போதிய மருத்துவா்கள் இல்லாமலும், பல மருத்துவப் பணியிடங்கள் காலியாகவும் உள்ளன. காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொது சுகாதாரத் துறையில் 3,500 கிராம சுகாதார செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏஎன்எம் படித்தோா் பலா் இருக்கும் நிலையில், இவா்களைக் கொண்டு இந்தப் பணியிடங்களை திமுக அரசு இதுவரை நிரப்பவில்லை. இதனால், டெங்கு தடுப்பு கொசு ஒழிப்பு பணிகள், முத்துலட்சுமி ரெட்டி உதவித் திட்டம், தடுப்பூசித் திட்டம் போன்ற பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த நவ. 21-ஆம் தேதி காலியாக உள்ள 1,100 மருத்துவா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று, மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் விளம்பரம் செய்துள்ளது. ஆனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலகங்களில் காலிப் பணியிடங்களே இல்லை என தவறான தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கூறியிருக்கிறாா். இனிமேலாவது காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் சி.விஜயபாஸ்கா்.
