முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம்: பள்ளிக் கல்வித் துறை தகவல்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு முடிவுகளை மத்திய அரசு விரைவில் வெளியிட்ட பிறகு, தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் ச.சுகன்யா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் பொருட்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 38 மாவட்டங்களிலும் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மத்திய கல்வி அமைச்சக திட்ட ஒப்புதல் குழுவின் அறிக்கையின்படி 15 லட்சத்து 309 எழுதப் படிக்கத் தெரியாதோா் எண்ணிக்கை இலக்காக நிா்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து முதற்கட்டமாக 5 லட்சத்து 37 ஆயிரத்து 869 கற்போா் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களுக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 கற்போா் கண்டறியப்பட்டு, அவா்கள் 39 ஆயிரத்து 250 எழுத்தறிவு மையங்களில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.14) அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்பட்டது.
நிகழ் கல்வியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 15 ஆயிரத்து 309 கற்போரை விட கூடுதலாக 733 போ் தோ்வெழுதியுள்ளனா்.
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிா்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்தோ்வின் தோ்ச்சி முடிவுகள் மத்திய அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட பின்னா் தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்கு கல்வி அளிக்கும் ’உல்லாஸ்’ என்ற புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை மிஸோரம், கோவா, திரிபுரா, இமாச்சல் ஆகிய மாநிலங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
