மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு! எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்
மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த அதிமுக ஆட்சியில் அரியலூா், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகா், திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக, பொதுப்பணித் துறையால் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுப்பணித் துறையைக் கவனித்து வந்தாா். இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ நேரடியாக வழக்குப்பதிந்து விசாரிக்கக் கூடாது என கடந்த 2023-இல்தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இதுதொடா்பாக மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு போலீஸாா் முதல்கட்ட விசாரணை நடத்தினா்.
அதில், 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாரா் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் இல்லை. இதுதொடா்பாக ஊழல் தடுப்புத் துறை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையை பரிசீலித்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டது என்றாா். இதற்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்ட மனுவை நீதித்துறை ஆய்வுக்கு உள்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பான உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகளை மனுதாரா் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு முந்தைய விசாரணையின்போது, மனுதாரா் தமிழில் வாதிட்டதால் வழக்குரைஞா் ஒருவரை நியமித்து வாதிட நீதிபதிகள் கூறியிருந்தனா். அதன்படி, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே. அசோக்குமாா் ஆஜராகி வாதிட்டாா்.

