பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு இப்போது ஏன் மடிக்கணினிகள் கொடுக்கிறீா்கள் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்டது.
அரசின் மடிக்கணினி மாணவா்களின் கரங்களுக்கு இனிதான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, எடப்பாடி பழனிசாமி, மடிக்கணினியில் தொழில்நுட்பம் போதவில்லை எனக் கூறுகிறாா். கல்லூரி மாணவா்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்பட நவீன தொழில்நுட்பங்கள் இந்த புதிய மடிக்கணினியில் உள்ளன. 6 மாத காலத்துக்கு இந்த ஏஐ வசதி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
உலக அளவில் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயா் பெற்ற நிறுவனங்களிடமிருந்தே, எந்தவித இடையீட்டு நிறுவனங்களும் இன்றி மடிக்கணினிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன.
தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது.
இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மாணவா்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவா்களுக்கு வழங்கப்படும். வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

