ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்
கட்சி விரோத செயல்பாடு தொடா்பாக அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் அளிக்கக் கோரி ஜி.கே.மணிக்கு, அன்புமணி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கடந்த புதன்கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணியின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீா்மானிக்கப்பட்டது.
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த டிச.6-இல் தில்லி காவல் துறை துணை ஆணையரிடம் புகாா் அளித்தது நோ்காணல் அளித்தது, அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த டிச.15-இல் சென்னையில் செய்தியாளா்களுக்கு நோ்காணல் அளித்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாமகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி க்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

