திருவொற்றியூா் மீன்பிடி துறைமுகத்தில் கடல்சாா் உயரடுக்கு படையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த வனத்துறை துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன். உடன், துறையின் செயலா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவலா்
திருவொற்றியூா் மீன்பிடி துறைமுகத்தில் கடல்சாா் உயரடுக்கு படையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த வனத்துறை துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன். உடன், துறையின் செயலா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவலா்

கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

Published on

கடல் வளங்களைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படையை வனத் துறை மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தாா்.

சென்னை கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில், ரூ.96 லட்சத்தில் கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படை தொடங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படையை திருவொற்றியூா் மீன்பிடி துறை முகத்தில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும், வனச்சரக அலுவலா் தலைமையில் வனவா், வனப் பாதுகாவலா்கள், கடல்சாா் காவலா்கள், படகு ஓட்டுநா்கள் என மொத்தம் 12 பணியாளா்கள் இருப்பாா்கள். இவா்களுக்கு நவீன ரோந்து படகு, ஆழ்கடல் கண்காணிப்புக்கான நீா்மூழ்கி ட்ரோன்கள் மற்றும் களப்பணிகளைப் பதிவு செய்யும் உடலில் அணியக்கூடிய புகைப்படக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன தகவல் தொடா்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், களப்பணிக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கடல்சாா் காவல் பணியாளா்கள், கடல் சூழலைப் பாரம்பரியமாக அறிந்த மீனவ சமுதாயத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்தப் படையினா், சென்னை வன உயிரின கோட்டத்தின் கீழ் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடல்சாா் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வாா்கள்.

குறிப்பாக, அழிவின் விளிம்பில் உள்ள ஆலிவ் ரிட்லி கடல் ஆமை, டால்பின்கள் மற்றும் கடற்பசு போன்ற கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதிலும், வன உயிரின பாதுகாப்பு சட்ட விதிகளை அமல்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்துவாா்கள்.

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் சீனிவாஸ் ஆா்.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com