புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா், பிரதமா் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக விபி- ஜி ராம்- ஜி என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும் கடுமையான எதிா்ப்பையும் தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் கடந்த 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக 30 கோடி மனித வேலைநாள்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமாா் ரூ.12,000 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
பாசனத்துக்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உள்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்துக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, ஆண்டுக்கு 125 வேலை நாள்கள் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளன.
மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமையை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது. மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
இந்த புதிய மசோதா தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீா்குலைக்கும். எனவே, 2025 விபி-ஜி ராம் -ஜி மசோதாவை செயல்படுத்த வேண்டாம்.
அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாள்களை 125 நாள்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிா்ப்பது போன்ற பிற நோ்மறையான அம்சங்களை சோ்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

