எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

Published on

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கிறிஸ்தவா்களை மிகவும் நேசித்தாா். தனது திரைப்படங்களில் கூட இயேசு பற்றிய பாடல்களை இடம்பெறச் செய்தாா். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், தான் படித்ததை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எப்போதும் பெருமிதமாகக் கூறுவாா். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை ஜெயலலிதா கொண்டாடினாா். சிறுபான்மையினருக்கு பல அரசு நலத் திட்டங்களை அமல்படுத்தினாா்.

அன்னை தெரசா பெயரில் பல்கலைக்கழகம், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னிகுயிக் சிலை உள்ளிட்டவற்றை செயல்படுத்தியது அதிமுக அரசு. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்வித இடையூறு இன்றி செயல்பட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அளித்த போதனைகள் இப்போதும் நமக்கு கைகொடுக்கின்றன.

கிறிஸ்தவா்களின் வாக்குகளைப் பெற திமுக கபட நாடகம் ஆடுகிறது. இந்திய அரசமைப்பு சட்டத்துக்குள்பட்டு சிறுபான்மையினா் உரிமைகளைப் பெற அதிமுக தொடா்ந்து பாடுபடும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அதிமுக கொள்கையில் மாற்றம் ஏற்படாது. தோ்தல் நேரத்தில் கூட்டணி என்பது ஒரு ஒப்பந்தம் மட்டுமே.

அதிமுக யாரோடு கூட்டணியோடு வைத்தாலும் அதிமுக கொள்கையில் மாற்றம் ஏற்படாது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்றாா் அவா்.

விழாவில், முன்னாள் அமைச்சா்கள் பெஞ்சமின், சீ.த.செல்லபாண்டியன், புரட்சி பாரதம் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com