தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தில் 98 கிராமங்களின் வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.தமிழ்அரசு தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் டி.செஞ்சியம்மாள், மாவட்டத் தலைவா் ஜி.சின்னதுரை, மாவட்ட துணைச் செயலா்கள் எம்.சின்னதுரை, பி.அற்புதம், என்.வஜ்ஜிரவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜி.சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவா் இ.மோகனா, மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.பத்மா, விதொச வட்டத் தலைவா் எஸ்.கலையரசன், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜி.ராஜா, நரிக்குறவா் சாந்தி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா். தமிழ்நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் உள்ள ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில், வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழங்குடி பட்டியலில் மலக்குலையன், ஈரோடு மாவட்ட மலையாளி, வேட்டைக்காரன் ஆகியோரை எஸ்.சி. பட்டியலில் சோ்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் பேச்சு நடத்தினாா். அப்போது, 15 நாள்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவா் உறுதி அளித்தாா்.
அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
