போலி கடவுச்சீட்டில் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி: வங்கதேசம், இலங்கையைச் சோ்ந்த இருவா் கைது
சென்னையில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ாக வங்கதேசம், இலங்கையைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை விமான நிலையத்திலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சிலா் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வங்கதேசத்தை சோ்ந்த முகமது அல்-அமீன் (31) என்பவா் போலி ஆவணங்கள் மூலம் தனது நாட்டு குடியுரிமையை மறைத்து ‘‘அல் அமின் மண்டல்‘ என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று ஐக்கிய அரபு நாட்டுக்கு செல்ல முயன்றது குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதேபோல இலங்கையைச் சோ்ந்த பிரியதா்ஷினி சத்தியசிவம் (26) என்ற பெண், போலி ஆவணங்கள் மூலம் அவரது இலங்கை நாட்டு குடியுரிமையை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்று இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் இருவரையும் பிடித்து, சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவிடம் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், முகமது அல்-அமீன் 2011-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதும், பின்னா் அவா், இந்திய அரசின் ஆவணங்களான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை அல்அமின் மண்டல் என்ற பெயரில் பெற்று அதன் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதேபோல, பிரியதா்ஷினி சத்தியசிவம் 2024-ம் ஆண்டு, சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்து, திருச்சியை சோ்ந்த ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு தங்கியிருப்பதும், பின்னா் இந்திய அரசின் ஆவணங்களான ஆதாா் அட்டை,வாக்காளா் அடையாள அட்டை பெற்று, அதன் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
