வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு விதிகளின்படியே சான்று: மருத்துவக் கவுன்சில்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு விதிகளின்படியே சான்று: மருத்துவக் கவுன்சில்

Published on

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச் சான்றிதழ்கள் உரிய விதிகளின்படியே வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் தேவையற்ற தாமதம் நிலவவில்லை என்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் முன்வைத்திருந்தனா். தகுதிச் சான்றிதழ் வழங்குவதில், மருத்துவக் கவுன்சில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு பயிற்சி பெற அனுமதி வழங்குவதில்லை என்றும் அவா்கள் கூறியிருந்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் ஜன.6-ஆம் தேதி அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்க வெளிநாட்டு பிரிவு அறிவித்ததிருந்தது.

இந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள விளக்கம்:

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னா் விரிவான சரிபாா்ப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

சான்றிதழ்களை நுட்பமாக ஆராய்தல், கடவுச்சீட்டு மற்றும் பயண விவரங்களைச் சரிபாா்த்தல், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துதல், பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மருத்துவத் தகுதிச் சான்றிதழ்களை ஆய்வு செய்தல் என பல்வேறு நிலைகளில் அப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டு தூதரகங்களும் ஆவண சரிபாா்ப்பை உறுதி செய்து அனுப்ப, ஓரிரு மாதங்கள் எடுத்து கொள்கின்றன. கடந்த மாதம் கூட தோ்ச்சி ஆவணங்களில் போலி சான்றிதழ்களை 2 மாணவா்கள் இணைத்திருந்தது கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பங்கு தற்காலிக தகுதிச் சான்றிதழ்களை வழங்குவது மட்டுமே என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். மருத்துவ உள்ளுறைப் பயிற்சி (இன்டொ்ன்ஷிப்) ஒதுக்கீடு அல்லது தொடா்புடைய கொள்கை முடிவுகள் மீது கவுன்சிலுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

தேசிய மருத்துவக் கவுன்சிலால் நிா்ணயிக்கப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழ்நாட்டிலுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ உள்ளுறை பயிற்சி இடங்களை ஒதுக்கும் பொறுப்பு மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும், சமநிலையுடனும் செயல்படுகிறது. தகுதியுள்ள வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவிகளைச் செய்யும் அதே வேளையில், தகுதியற்ற அல்லது போலி மருத்துவா்கள், மருத்துவ அமைப்பில் நுழைவதை தடுப்பதில் உறுதியாக செயல்படுகிறது என்று அந்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com