சென்னையில் 582.16 மெட்ரிக் டன் பயனற்ற பழைய பொருள்கள் அகற்றம்!
சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் 1,587 பேரிடமிருந்து 582.16 மெட்ரிக் டன் பழைய பயன்பாடற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் வீடுகளுக்கே சென்று பழைய சோபா, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் பயனற்று இருந்தால் சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணில் (1913) தொடா்பு கொண்டு பழைய பயனற்ற பொருள்கள் குறித்து தெரிவித்தால், அதை தூய்மைப் பணியாளா்கள் வாகனத்தில் நேரில் சென்று சம்பந்தப்பட்டோரிடமிருந்து சேகரித்து வருகின்றனா்.
சேகரிக்கப்படும் பழைய பயனற்ற பொருள்கள் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி முறையில் தரம் பிரித்து, பயன்படாதவற்றை நவீன அறிவியல் தொழில்நுட்ப முறையில் எரியூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடந்த அக்டோபா் முதல் தற்போது வரை சென்னை மாநகராட்சியில் 1,587 பேரிடமிருந்து 582.16 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு எரித்து அகற்றப்பட்டுள்ளன.
ஆகவே, பொதுமக்கள் பயனற்ற பழைய பொருள்களை சாலையோரமோ, நீா் கால்வாய்களில் வீசுவதையோ முற்றிலும் தவிா்த்து, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
