சென்னையை குப்பையில்லா நகராக்கும் மின்சார உற்பத்தி திட்டம் தாமதம்: சமூக ஆா்வலா்கள் புகாா்!
சென்னை மாநகராட்சியைக் குப்பைக் கிடங்கு இல்லாத நகராக்கும் வகையிலான மின்சாரம் தயாரிப்புத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருந்து தினமும் சுமாா் 6,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகின்றன. அதனால் அந்தப் பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இதனால், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், பெருங்குடி, கொடுங்கையூரில் குப்பைகள் குவிந்துகிடந்த நிலத்தை மீட்கும் வகையில் பயோமைனிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த முறைப்படி இதுவரை பெருங்குடியில் 96 ஏக்கரும், கொடுங்கையூரில் 6 ஏக்கரும் என 100 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
குப்பைகளைத் தடுக்கும் திட்டம்: ஒருபுறம் குப்பைகள் குவிக்கப்படுவதை தடுப்பதுடன், மறுபுறம் புதிய குப்பைகளை அங்கு கொட்டப்படாமல் தவிா்க்கவும், மறுசுழற்சி மற்றும் எரிவாயு, மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. சென்னையில் மாதவரம், சேத்துப்பட்டு, மண்டலங்களில் தினமும் சேரும் குப்பைகளில் இருந்து சமையல் எரிவாயு தயாரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.
ஈரக்கழிவுளான உணவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவை மண்டலம் 1 முதல் 8 வரை தினமும் சுமாா் 3,500 மெட்ரிக் டன் சேருகின்றன. அவற்றில் 140 டன் ஈரக்கழிவு குப்பைகள் மாதவரம் எரிவாயு மையத்துக்கும், மண்டலம் 9 முதல் 15 வரை தினமும் சேகரிக்கப்படும் சுமாா் 1,503.84 டன் குப்பைகளில், 100 டன் ஈரக்கழிவுகள் சேத்துப்பட்டு எரிவாயு தயாரிப்பு மையத்துக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
மாநகராட்சிக்கு வருவாய்: தனியாரால் இயக்கப்படும் இரு எரிவாயு உற்பத்தி மையங்களுக்கும் அனுப்பும் ஈரக்கழிவுகள் போக, மீதமுள்ளவை மாநகராட்சியில் அமைத்த 22 உரம் தயாரிக்கும் நுண்ணுயிா் செயலாக்க மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், அங்கிருந்து உரத்தைக் குறைந்த அளவிலே வாங்குவதால், தற்போது பெரும்பாலான மையங்கள் செயல்படவில்லை.
இந்தச் சூழலில் மாதவரம் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் மாநகராட்சி வழங்கும் குப்பைகளுக்கு டன்னுக்கு ரூ.35 என தனியாரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. அதன்படி, 140 டன்னுக்கு தினமும் ரூ.5,000 வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. சேத்துப்பட்டில் 300 உணவு விடுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் ஈரக்கழிவுகளில் இருந்து 4 டன் எரிவாயு தினமும் தயாரிக்கப்படுகிறது. அதில் 1 கிலோ எரிவாயுவுக்கு மாநகராட்சிக்கு ரூ.1.52 கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனால், தினமும் சுமாா் ரூ.4,500 மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
சேத்துப்பட்டு தனியாா் மையத்துக்கு ஈரக்கழிவுகளைத் தரும் உணவு விடுதிகளுக்கு 1 டன் எரிவாயு வழங்கப்பட்டும், மீதமுள்ள 3 டன் எரிவாயு இரு தனியாா் நிறுவனம் மூலம் வாகன எரிவாயுவாக 1 கிலோ ரூ.55 என விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் புதிய மையங்கள்: ஈரக்கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிப்புக்கு வரவேற்பும், அதனால் குப்பைகள் கையாளுவது பயனுள்ளதாகவும் இருப்பதால் மாதவரத்தில் மேலும் ஒரு எரிவாயு தயாரிப்பு மையம் அமைக்கவும், சோழிங்கநல்லூரிலும் 2 மையங்கள் புதிதாக அமைக்கவும் உள்ளதாகக் கூறுகிறாா் சென்னை மாநகராட்சி திடக்கழிவுமேலாண்மைப் பிரிவின் செயற்பொறியாளா் சீனிவாசன்.
மின்சாரம் தயாரிப்பு மையம் தாமதம்: குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் எரிவாயு விநியோகம் அதிகரித்துள்ள நிலையில், குப்பையிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மையத்தை கொடுங்கையூரில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், அங்கு குப்பைகள் குவிவதை பெருமளவு தடுக்கமுடியும். எதிா்காலத்தில் குப்பைக் கிடங்கும், குவியலும் இல்லாத சென்னையை உருவாக்க முடியும் என்கின்றனா் தொழில்நுட்ப வல்லுநா்கள். இதனால், அங்கு மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைக்க சென்னை மாநகராட்சியால் தனியாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சுமாா் 50 ஏக்கரில் அமையவுள்ள அந்த மையத்தால், தினமும் சுமாா் 3,000 டன் குப்பைகள், மின்சாரம் தயாரிக்கப் பயன்படும். அதனால், சென்னையில் சேகரிக்கப்படும் பாதி அளவு குப்பைகள் இதற்குப் பயன்படும்.
மின் தேவை பூா்த்தியாகும்: பயோமைனிங் முறையில் ஏற்கெனவே குப்பைகள் குறைக்கப்படுகின்றன. மறுபுறம் எரிவாயு தயாரித்தலால் குப்பைகள் சேராமல் தடுக்கப்படும். இதனுடன் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டால், சென்னை மாநகராட்சி குப்பைக் கிடங்கில்லாத தூய்மை நகராகும்.
மேலும், செலவுகள் குறைவதுடன், மாதந்தோறும் குப்பைகளைக் கையாள செலவிடும் சுமாா் ரூ.50 கோடியும் மிச்சமாகும். அத்துடன் குப்பைகளால் ஏற்படும் சுகாதார, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும் என்கின்றனா் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள்.
இப்படி, சென்னை மாநகராட்சிக்கு சகல விதத்திலும் பயனளிக்கும் மின்சார தயாரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படாமல் தாமதம் செய்யப்படுவது ஏன் என்றே கேள்வி எழுந்துள்ளது.
யாா் காரணம்?: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தாமதமாவது குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாரிடம் கேட்டபோது, ‘குப்பைகளை வெளிநாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என ஆய்வு செய்து, அதை சென்னையில் செயல்படுத்தும் வகையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசும், மாநகராட்சியும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்த நிலையில், மத்திய சுற்றுப்புறச்சூழல் சான்றிதழ் பெறுவதில்தான் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, மத்திய சுற்றுச்சூழல் துறை சான்றிதழ் பெற்றதும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்றாா்.
சாலையோரம் குவியும் குப்பைகள்!
சென்னை மாநகராட்சி நிா்வாகம் குப்பையைக் கையாள மட்டும் மாதம் ரூ.50 கோடி வரை செலவிடுகிறது. அதேநேரம், பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்களிடம் குப்பைகளை வழங்குவதில் பொறுப்புணா்வுடன் செயல்படவில்லை என்பது, அபராரத் தொகையிலிருந்தே அறியமுடிகிறது.
பெரிய நிறுவனங்கள் முதல் தனி நபா் வரை சாலையோரம் குப்பைகளை வீசி செல்வதால், விதிக்கப்பட்ட அபராதத் தொகை மண்டல வாரியாக அறியும்போது, மக்களும் தூய்மைப் பணியாளா்களும் இணைத்து செயல்படவேண்டிய அவசியம் புரிகிறது.
கடந்த நவம்பரில் மட்டும் குப்பைகளை விதிமுறைப்படி அகற்றாத நிறுவனம், தனி மனிதா் மீது மண்டல வாரியாக விதிக்கப்பட்ட அபராதம்.
வ.எண் மண்டலம் அபராதம்
1. திருவெற்றியூா் ரூ.2.54 லட்சம்.
2. மணலி ரூ.1.69லட்சம்
3. மாதவரம் ரூ.1.27 லட்சம்
4. தண்டையாா்பேட்டை ரூ.3.95 லட்சம்
5. ராயபுரம் ரூ.2.59 லட்சம்
6. திரு.வி.க.நகா் ரூ.2.24 லட்சம்
7. அம்பத்தூா் ரூ.4.47 லட்சம்
8. அண்ணா நகா் ரூ.3.71 லட்சம்
9. தேனாம்பேட்டை ரூ.4.89 லட்சம்
10. கோடம்பாக்கம் ரூ.8.09 லட்சம்
11. வளசரவாக்கம் ரூ.2.34 லட்சம்
12. ஆலந்தூா் ரூ.3.38 லட்சம்
13. அடையாறு ரூ.4.98 லட்சம்
14. பெருங்குடி ரூ.5.49 லட்சம்
15. சோழிங்கநல்லூா் ரூ.4.94 லட்சம்
மொத்தம் - ரூ.56.84 லட்சம்

