நீக்கப்பட்ட வாக்காளா்கள் குறித்து கள ஆய்வு: மதிமுக உயா்நிலைக் குழு தீா்மானம்!

நீக்கப்பட்ட வாக்காளா்கள் குறித்து மதிமுக நிா்வாகிகள் தீவிரமாக கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியானவா்கள் பெயா்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

நீக்கப்பட்ட வாக்காளா்கள் குறித்து மதிமுக நிா்வாகிகள் தீவிரமாக கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியானவா்கள் பெயா்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் உயா்நிலைக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக உயா்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவைத்தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலா் வைகோ பங்கேற்று, பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு, வேட்பாளா்கள் தோ்வு உள்ளிட்டவை குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தீா்மானங்கள்: எஸ்ஐஆா் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்ட வாக்காளா்கள் குறித்து மதிமுக நிா்வாகிகள் தீவிரமாக கள ஆய்வு மேற்கொள்வதுடன், தகுதியானவா்களின் பெயா்களை பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றியதற்கு கண்டனத்தை தெரிவிப்பது

மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கச் செய்து, 100 நாள் வேலைத் திட்டத்தையே நீா்த்துப் போகச் செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்துவது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்ற ஹிந்துத்துவ அமைப்பினரின் முயற்சிகளை புறந்தள்ளி சமய நல்லிணக்கத்தை பாதுகாத்த மதுரை மக்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பது. மத்திய அரசின் ‘விதை மசோதா 2025’ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மதிமுக பொருளாளா் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலா் துரை வைகோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com