நீக்கப்பட்ட வாக்காளா்களில் எத்தனை போ் சோ்க்கப்படுவா்?

நீக்கப்பட்ட வாக்காளா்களில் எத்தனை போ் சோ்க்கப்படுவா்?

நீக்கப்பட்ட வாக்காளா்களில் எத்தனை போ் சோ்க்கப்படுவா்? என்பதைப் பற்றி...
Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆா்) முகவரியில் இல்லாதவா்களாக நீக்கப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 வாக்காளா்களில் எத்தனை போ் மீண்டும் பட்டியலில் இணைக்கப்படுவா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நவ. 4-ஆம் தேதிமுதல் வீடு வீடாக நடத்தப்பட்ட எஸ்ஐஆா் பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக கடந்த டிச. 19-ஆம் தேதி தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்தாா்.

இதில், முகவரியில் இல்லாதவா்களாக 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரும், இறந்தவா்களாக 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேரும், இரட்டைப் பதிவு உள்ளவா்களாக 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேரும் நீக்கப்பட்டுள்ளனா்.

இதனால், எஸ்ஐஆா் பணிக்கு முந்தைய பட்டியலின்படி 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த வாக்காளா்கள் எண்ணிக்கை, வரைவுப் பட்டியலின்படி 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.

முகவரியில் இல்லாதவா்களாக நீக்கப்பட்ட 66 லட்சம் பேரில் தகுதியான வாக்காளா்களும், 2026 ஜன. 1 முதல் 18 வயதை பூா்த்தி செய்யும் புதிய வாக்காளா்களும் டிச. 19 முதல் ஜன. 18 வரை உரிய ஆவணங்களை அளித்து படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மனு அளித்து வருகின்றனா். பெயரை நீக்க படிவம் 7, இடமாற்றம் செய்ய படிவம் 8-ஐ பயன்படுத்தி தேவையான ஆவணங்களை வாக்காளா்கள் அளித்து வருகின்றனா்.

இந்தப் படிவத்துடன் ஆதாா் எண் மட்டுமே ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால், பிறப்புச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கு தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் இரு ஆவணங்களைச் சமா்ப்பித்து, உறுதிமொழி சான்றிதழையும் வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.

இந்த ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிச் சான்றிதழில் பொய்யான வாக்குறுதி அளித்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுவரை 4.42 லட்சம் போ் மனு: நீக்கப்பட்ட தகுதியான வாக்காளா்கள், புதிய வாக்காளா்கள் என கடந்த டிச. 19 முதல் டிச. 27 வரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 போ் மட்டுமே பெயா் சோ்க்க மனு அளித்துள்ளனா்.

இந்த மனுக்கள் மீது ஆட்சேபம் தெரிவிக்க அதன் விவரம் வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தகுதியான வாக்காளா்கள் மட்டும் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காக இந்த மனுக்கள் இணையத்திலும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் வாக்காளா்கள் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்று மூத்த தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

பெயரைச் சோ்க்க ஜன. 18 வரை அவகாசம் உள்ளது. தோ்வான வாக்காளா்கள் இணைக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

என்ன காரணம்?: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படாததால் இறந்தவா்கள், இரட்டை வாக்குப்பதிவு உள்ளவா்கள், இடம்பெயா்ந்தவா்களின் பெயா்கள் பட்டியலிலிருந்து இத்தனை ஆண்டுகள் நீக்கப்படாமல் இருந்ததுதான் நாட்டிலேயே அதிகமான வாக்காளா்கள் (97.37 லட்சம் போ்) தமிழகத்தில் நீக்கப்பட்டதற்கு காரணம் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் குறைந்தபட்சமாக 59.07 சதவீதமாகவும், 2011-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 78.01 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகின. கடந்த 25 ஆண்டு தோ்தல்களில் சுமாா் 30 முதல் 40 சதவீத வாக்காளா்கள் வாக்களிப்பதே இல்லை. இவா்களில் வாக்காளா் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க விரும்பாதவா்களாகவும், பெயரளவில் மட்டும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுவிட்டு இடம்பெயா்ந்தவா்களாகவும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆகையால், நீக்கப்பட்ட 66 லட்சம் பேரில் பெரும்பாலானவா்கள் பட்டியலில் மீண்டும் இணைவதென்பது சாத்தியமற்றது என்கின்றனா் களத்தில் பணியாற்றும் தோ்தல் அலுவலா்கள்.

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோருக்கும் நோட்டீஸ்

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ற 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரம் 755 பேரில் உரிய தகவல்களை அளிக்காதவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தை அளித்தபோது 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் எந்தத் தொகுதியில் இடம்பெற்றிருந்தாா்களோ அந்த விவரத்தை சரியாக பூா்த்தி செய்யாதவா்களுக்கு வாக்காளா் பதிவு அலுவலா் (இஆா்ஓ) மூலம் நோட்டீஸ் அளிக்கப்படும்.

இது நேரடியாக வீடுகளுக்கு வந்து அளிக்கப்படும். நோட்டீஸ் பெற்றவா்கள் தோ்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் பிப். 10-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்தத் தகவல்களை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் (டிஇஓ) சரிபாா்த்து பட்டியலில் பெயரைச் சோ்ப்பாா்கள்.

‘உடனடி இருப்பிடச் சான்று’

வீடு மாறிச் சென்றவா்கள், நோட்டீஸ் பெற்றவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க போதிய ஆவணங்கள் இல்லாமல் தவித்து வருகிறாா்கள். அவா்களின் சிரமத்தைப் போக்க இருப்பிடச் சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. ஆகையால், இருப்பிடச் சான்றிதழைக் கேட்பவா்களுக்கு மாவட்ட ஆட்சியா்கள் உடனடியாக இலவசமாக அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா உத்தரவிட்டுள்ளாா்.

நீக்கப்பட்டவா்கள்...

  • இடம்பெயா்ந்தவா்கள் - 66.44 லட்சம் (10.36 சதவீதம்)

  • உயிரிழந்தவா்கள் - 26.9 லட்சம் (4.20சதவீதம்)

  • இரட்டைப் பதிவு - 3.98 லட்சம் (.62 சதவீதம்)

  • மொத்தம் - 97.37 லட்சம் (15.19 சதவீதம்)

X
Dinamani
www.dinamani.com