புதிய வாக்காளா் சோ்க்கை படிவத்தில் உறுதிமொழி சான்றுகள் பற்றாக்குறை: பொதுமக்கள் அலைக்கழிப்பு!
சென்னையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுவரும் நிலையில், புதிய வாக்காளா் சோ்ப்பு படிவத்துடன் ( படிவம் 6) வழங்கப்படும் உறுதிமொழிச் சான்று பற்றாக்குறை ஏற்பட்டதால் அதன் நகல் எடுத்து இணைக்க பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 1.50 லட்சம் போ் இறந்தவா்களாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ளவா்கள் புதிய வாக்காளா்களாகச் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய வாக்காளா் சோ்க்கை மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக சென்னையில் 4,097 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தொகுதி மாறி சென்றவா்களுக்கும் புதிய வாக்காளா் சோ்க்கைப் படிவம் (படிவம் 6) வழங்கப்பட்டு வருகிறது. புதிய வாக்காளா் சோ்க்கைப் படிவத்துடன் உறுதிமொழி சான்றும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் அந்த உறுதிமொழிச் சான்று பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் படிவம் அளிக்க வந்தவா்களையே நகல் எடுத்து வருமாறு அறிவுறுத்தியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான நகல் எடுக்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நகல் எடுக்க சிரமம் ஏற்பட்டதாக மக்கள் கூறினா்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிய வாக்காளராகச் சோ்வதற்கு படிவம் பெற வந்தவா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் உறுதிமொழிச் சான்று உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. படிவத்தை ஜன.18-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து தரலாம் என்பதால் பிரச்னை இல்லை என்றனா்.

