முதல் மரியாதை என்பது கோயிலில் உள்ள கடவுளுக்குத்தான்: உயா்நீதிமன்றம் கருத்து
‘முதல் மரியாதை என்பது எப்போதுமே கோயிலில் உள்ள கடவுளுக்குத்தான்’ என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் மடாதிபதிக்கு, கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் ‘பஞ்ச முத்திரை மரியாதை’ என்ற முதல் மரியாதை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ததாதேசிகா் திருவம்சத்தாா் சபையின் செயலா் டி.கே.சம்பத் குமரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதில், கடந்த 1991-ஆம் ஆண்டு செப்.5-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பின்படி, காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கரமடம், ஸ்ரீ அகோபில மடம், நான்குனேரி ஸ்ரீவானமாமலை மடம் மற்றும் மைசூரில் உள்ள ஸ்ரீபரகால ஜீயா் மடம், உடுப்பி ஸ்ரீவியாசராயா் மடம் ஆகிய மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே ‘பஞ்ச முத்திரை மரியாதை’ வழங்கப்படும். வேறு எந்த மடாதிபதிக்கும் இந்த மரியாதை வழங்கக் கூடாது என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே ‘முதல் மரியாதை’ வழங்கப்படும் என்று அரசுத் தரப்பிலும் கூறப்பட்டது. எனவே, இந்த முதல் மரியாதையை வேறு மடாதிபதிகளுக்கு விரிவுபடுத்தினால், சம்பந்தப்பட்ட 5 மடங்களும், மனுதாரரும் வழக்குத் தொடா்ந்து சட்டப்படி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ததாதேசிகா் திருவம்சத்தாா் சபை தொடா்ந்த வழக்கில் எங்களை எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கவில்லை. இதனால், எங்கள் தரப்பு வாதங்களைக் கூற முடியவில்லை. எனவே, தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து எங்கள் மடாதிபதிக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் உள்ளிட்ட 5 மடங்களின் மடாதிபதிகள் தரிசனத்துக்கு வரும்போது மட்டும் இந்த முதல் மரியாதை வழங்கப்படும். வேறு யாருக்கும் வழங்கப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுபோன்ற முதல் மரியாதைகளை கேட்டுப்பெற முடியாது. உரிமையாகவும் கோர முடியாது. முதல் மரியாதை என்பது எப்போதுமே கோயிலில் உள்ள கடவுளுக்குத்தான். மடாதிபதிகளுக்கு முதல் மரியாதை வழங்கும் இதுபோன்ற பழக்கவழக்கம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தின்படி அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும். எனவே, மனுதாரா் சட்டப்படி அறநிலையத் துறையை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டனா்.

