டெங்கு பரவல்
டெங்கு பரவல்

டெங்கு பாதிப்பு பாதியாக குறைவு: பொது சுகாதாரத் துறை தகவல்

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை மற்றும் குளிா் காலங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பக்கூடும்.

இதைக் கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபா் வரை டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்தது. சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் அப்போது பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து எடுத்த தொடா் நடவடிக்கையால் பாதிப்பு விகிதம் தற்போது குறைந்து நாள்தோறும் 100-க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதார பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், டெங்கு உறுதி செய்யப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் பரவல் தடுக்கப்பட்டது. இதன் பயனாக பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 46, 927 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். 13 போ் உயிரிழந்தனா்.

நிகழாண்டில் பாதிப்பு எண்ணிக்கை 25,278-ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆகவும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 6,284 பேரும், திருவள்ளூரில் 2,094 பேரும், கோவையில் 1,882 பேரும்,கடலூரில் 1,525 பேரும் டெங்கு பாதிப்புக்குள்ளாகினா்.

மற்ற மாவட்டங்களில் அந்த எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூரில் 91 பேருக்கும் , நீலகிரியில் 103 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

டெங்கு பரவலின் தீவிரம் குறைந்திருந்தாலும் அடுத்த இரு மாதங்களுக்கு நோய்ப் பரவல் இருக்கும். எனவே, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com