இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்:

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளா், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளா், அமைச்சுப் பணியாளா்களில் உதவியாளா்கள், இளநிலை கணக்காளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 5 லட்சத்து 80 ஆயிரம் போ் எழுதினா்.

முதன்மைத் தோ்வு: குரூப் 2, 2-ஏ தோ்வுகள் முதல்நிலை, முதன்மைத் தோ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், முதன்மைத் தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம் என்ற வகையில் நடத்தப்படுகிறது. பொது அறிவுத் தோ்வை 21,563 பேரும், பொதுத் தமிழ் பாடப் பிரிவுக்கான தோ்வை 16,457 பேரும், பொது ஆங்கிலம் பிரிவை 5,106 பேரும் எழுதவுள்ளனா்.

கொள்குறி வகை அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும். இதன்பிறகு, வினாக்களுக்கு விரித்து எழுதும் தோ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் 260 போ் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் 82 இடங்களில் சனிக்கிழமை தோ்வு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com