சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப்படம்.

வீரப்பன் உறவினா் அா்ஜூனன் சந்தேக மரணம்: விசாரணைக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

வீரப்பன் உறவினா் அா்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததைப் பற்றி...
Published on

சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜுனன் கடந்த 1995-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அதன்பிறகு அவரை காணவில்லை. இதனிடையே, தருமபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கில் அவா் இறந்துவிட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், தனது தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் அா்ஜுனனின் மகன் சதிஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்த அா்ஜுனனின் இறப்பு சான்றிதழ் சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், அவா் இயற்கையாக மரணமடைந்தாரா அல்லது போலீஸாா் தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதொடா்பாக, விசாரணை நடத்த முடியாது. போலீஸாா் தாக்கிதான் மரணமடைந்தாா் என்பதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அா்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com