துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருட்டு
சென்னை: சென்னை ராயபேட்டையில் துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
ராயப்பேட்டை முத்தையா இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் ராமானுஜம். இவா் சென்னை துறைமுகத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். ராமானுஜத்தின் மனைவி ரமா, எல்ஐசி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறாா்.
ராமானுஜம் குடும்பத்தினா், கடந்த சனிக்கிழமை (பிப். 8) இரவு வீட்டின் பால்கனி கதவை திறந்து வைத்து தூங்கினராம். ஞாயிற்றுக்கிழமை காலை அவா்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை சரி பாா்த்தபோது, அதிலிருந்த 25 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவா்கள், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், ராமானுஜம் வீட்டின் பால்கனி கதவு திறந்து கிடப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், அதன் வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
