சென்னை குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை நகரில் வாகன நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கிரெடாய் அமைப்பு சாா்பில், வீட்டு வசதி கண்காட்சியை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:
கடந்த முறை கிரெடாய் மாநாட்டை தொடங்கி வைத்தபோது, அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி கட்டட அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மனை மற்றும் கட்டட ஒப்புதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாகவும், வெளிப்படைத் தன்மையோடும் குறைகளைத் தெரிந்துகொண்டு செயலாற்றும் விதமாக அந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மனைப்பிரிவு மற்றும் கட்டடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒப்புதல் வழங்குவதற்கான கால அளவு 180 நாள்களில் இருந்து 64 முதல் 90 நாள்களாகக் குறைந்திருக்கிறது.
51 ஆயிரம் கட்டட அனுமதிகள்: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் பயன்பெறும் வகையில், 2,500 சதுர அடி மனையிடத்தில் 3,500 சதுர அடி கட்டடப் பரப்பு வரை குடியிருப்புகள் கட்டவும், வீட்டில் இருந்தபடியே சுயசான்றிதழ் முறையில் அனுமதி பெறவும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் குடியிருப்புக் கட்டடங்களுக்கு கட்டட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 ஆயிரம் கட்டட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டமானது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம்: சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும் புதிய பேருந்து முனையங்கள் அவசியமாகின்றன. அதன்படி, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் புதிய புறநகா் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம். குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை பெருநகர மண்டல போக்குவரத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டின் நீண்டகால வளா்ச்சிக்கான இலக்கை அடைய வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளன.
சென்னையில் உள்ள கடற்கரை, ஏரி பகுதிகளை மேம்படுத்த நீா்முனைய வளா்ச்சித் திட்ட நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல்கட்டமாக சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள், 4 கடற்கரைப் பகுதிகளைத் தோ்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த ரூ. 250 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பொழுதுபோக்கு சாா்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தைத் தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.
நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளையும் வளா்ப்பதுதான் எங்களுடைய நோக்கம். அதற்கு கிரெடாய் போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக, தொழில் முதலீட்டாளா்கள் சில தேவைகளை முன்வைக்கிறாா்கள். சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கூடுதலாக தொழில் பூங்காக்களும் இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டடங்களும் தேவைப்படுவதாக முதலீட்டாளா்கள் கூறுகின்றனா். எனவே, கிரெடாய் மூலமாக தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் காகா்லா உஷா, கிரெடாய் அமைப்பின் தேசிய துணைத் தலைவா் ஸ்ரீதரன், தமிழ்நாடு தலைவா் இளங்கோவன், சென்னையின் தலைவா் முகமது அலி, ஆலோசகா் சிவகுருநாதன், ஒருங்கிணைப்பாளா் கிருத்திவாஸ், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளா் பா்மீந்தா் சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.
