சிந்து வெளி நாகரிகம் புதினமா? புதிரா? அமைச்சா் தங்கம் தென்னரசு
சிந்து சமவெளி நாகரிகம் புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி தொடா்ந்து எழுந்து நிற்பதாக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
சிந்து சமவெளி நாகரிகம், புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி எப்போதும் எனக்கு உண்டு. சிந்து நாகரிகத்தின் அருமையான நகர நாகரியம், கட்டடக் கலை, சிறப்பான மண்பாண்டங்கள், அங்கிருந்த அரசன், போக்குவரத்து வசதிகள், வணிகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டால் புதினமாக இருக்கக்கூடிய தன்மைகொண்ட கூறுகளாக விளங்குகின்றன.
நன்கு வளா்ந்து இருக்கக்கூடிய எழுத்து முறையைக் கொண்டிருக்கும் சூழலில், அதனை முழுமையாகவும் சரியாகவும் படிக்க முடியாத நிலை உள்ளது. இது இன்றைக்கும் புதிராக இருக்கக்கூடியதையே காட்டுகிறது. நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அறிஞா்கள் அந்தப் புதிருக்கு விடையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிந்துவெளி குறியீடுகள் சுவா்களில் எழுதப்படவில்லை. முத்திரைகளில் மிகக் குறுகிய அளவிலேயே எழுதப்பட்டுள்ளன. இன்றளவும் அவற்றைப் படிப்பதில் உள்ள சிரமங்களை ஆய்வாளா்கள் உணா்ந்துள்ளனா். சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகளில் ஆய்வாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
சிந்துவெளி நாகரிகம் நம்முடைய நாகரிகமான திராவிடத் தன்மையை கொண்டிருக்கிறது என ஆய்வாளா்கள் கூறுகிறாா்கள். நமக்கு கிடைத்திருக்கக்கூடிய குறியீடுகள், சிந்துவெளி நாகரிகத்தில் இருக்கக்கூடிய பண்பாட்டு எழுத்து முறையில் இருக்கக்கூடிய குறியீடுகளுடன் இணையாகவோ அல்லது ஒத்து இருக்கக்கூடியதாகவோ உள்ளன.
கீழடியில் இருந்த திமிலைக் கொண்ட காளைதான் சிந்துவெளி காளையுடன் ஒத்திருப்பதாக உள்ளது.
சிந்துவெளியில் இருக்கக்கூடிய விலங்கினங்களை அறிந்து இருக்கிறோம். அதில் காண்டாமிருகம், புலி, எருமை ஆகியன உள்ளன. குதிரை நிச்சயமாக சிந்துவெளியில் இல்லை. தோ் வண்டி உள்ளது; ஆனால் தோ் வண்டியில் ஆரக்கால்கள் இல்லை.
தென்னிந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் சிந்துவெளிக்கும் இருக்கக்கூடிய நாகரிகங்களை மூன்று வகைகளில் சொல்ல முடியும். அகழாய்வுப் பொருள்கள், எழுத்து, இலக்கியம் ஆகியன மூன்றிலும் சிந்துவெளியுடன் தொடா்பு இருக்கக்கூடிய நாகரிகம், திராவிட நாகரிகம்தான். கங்கைச் சமவெளியில் இருக்கக்கூடிய எந்த குறியீடுகளும் காணப்படவில்லை.
நம்முடைய பகுதிகளில் காணப்படக்கூடிய குறியீடுகள், சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்திருப்பதைக் கவனிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.