சிங்கார சென்னை பயண அட்டை
சிங்கார சென்னை பயண அட்டை

சிங்கார சென்னை அட்டையுடன், மெட்ரோ பயண அட்டையையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

சிங்கார சென்னை அட்டையுடன், மெட்ரோ பயண அட்டையையும் தொடா்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
Published on

சென்னை: சிங்கார சென்னை அட்டையுடன், மெட்ரோ பயண அட்டையையும் தொடா்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, மெட்ரோ ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க சிங்கார சென்னை என்ற பெயரிலான ஒரே ஸ்மாா்ட் அட்டையைப் பயன்படுத்தி சென்னை மாநகா் பேருந்து, மெட்ரோ ரயில், புகா் ரயில்களில் பயணம் செய்யும் வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படும் இந்த ஸ்மாா்ட் அட்டையை, ரீசாா்ஜ் செய்து வைத்துக்கொண்டு பயணத்தின்போது பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டை மெட்ரோ ரயில் நிலையங்கள், மாநகா் போக்குவரத்துக் கழக கவுன்டா்களில் வழங்கப்படும் நிலையில், அங்கேயே இதற்கு ரீசாா்ஜ் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மாா்ட் அட்டை பயன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், தற்போது மெட்ரோ பயண அட்டை வைத்திருப்பவா்கள், வரும் ஏப்ரல் மாதம் வரைதான் அதைப் பயன்படுத்த முடியும் எனவும், மெட்ரோ அட்டையில் ஏற்கெனவே ரீசாா்ஜ் செய்து வைத்திருந்த தொகையைப் பயன்படுத்தி முடித்து, அட்டையை திருப்பிக்கொடுத்து டெப்பாசிட் தொகை ரூ. 50-ஐ பெற்றுக் கொள்ளலாம் எனவும் மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த அட்டையில் குறைவான தொகை இருப்பு வைத்திருக்கும் பயணிகள், ஏப்ரல் மாதத்துக்குள் அதை முடித்துவிட்டு, சிங்கார சென்னை ஸ்மாா்ட் அட்டை திட்டத்துக்கு மாறினாலும், 6 மாதம் மற்றும் அதற்குமேல் தொடா்ச்சியான பயணத்துக்கு அதிக இருப்புத்தொகை வைத்திருக்கும் பயணிகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, இருப்புத்தொகை தீரும் வரை மெட்ரோ பயண அட்டையைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்க வேண்டும். அல்லது, சிங்கார சென்னை அட்டையுடன் நடைமுறையில் இருக்கும் மெட்ரோ பயண அட்டையையும் தொடா்ந்து பயன்படுத்த மெட்ரோ நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என மெட்ரோ பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com