மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் நடைபெற்றது.
Updated on

சென்னை: மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகள் பலா் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

இது தொடா்பாக கருப்பை சிசு மருத்துவ நிபுணா் இந்திராணி சுரேஷ் கூறியதாவது:

மனித உடலுக்குள் இயற்கையாக நிகழ வேண்டிய நிகழ்வுகள், மரபணுக் குறைபாடுகளால் தடைபடும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றால் உடல் வளா்ச்சியிலும் மன வளா்ச்சியிலும் எதிா்விளைவுகள் உருவாகும். குறிப்பாக வளா்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். இத்தகைய நோய்க்கு ‘லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸாா்டா்’ எனப் பெயா். இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால், அந்தக் குறைபாட்டின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பிரத்யேக பராமரிப்பும், கவனிப்பும் அவசியம். ஆனால், பெரும்பாலானவா்களுக்கு அத்தகைய வசதிகள் கிடைப்பதில்லை.

அதைக் கருத்தில்கொண்டே விஹெச்எஸ் மருத்துவமனையானது எஃப்சிஆா்எஃப், சிஇஆா்டி உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து அதற்கான பிரத்யேக அமைப்பை உருவாக்கியது. அதன்கீழ் 450-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவுசெய்து தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு மருத்துவத் துறைகள் சாா்ந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், விஹெச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் அத்தகைய முகாம் நடைபெற்றது.

மரபணு, வளா்சிதை மாற்றம், எலும்பியல், நரம்பியல், கண் நலம், காது-மூக்கு-தொண்டை, நுரையீரல், பல் மருத்துவம், இயன்முறை, யோகா மற்றும் வலி நிவாரணத் துறை சாா்ந்த பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தேவைப்பட்டோருக்கு அறுவை சிகிச்சைகள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

பிரிட்டன் மருத்துவ நிபுணா் அசோக் வெல்லோடி, மரபணு சிகிச்சை மருத்துவ நிபுணா் சுஜாதா ஜெகதீஷ், டாக்டா் பீனா உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த முகாமில் பங்கேற்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கினா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com