கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவு
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் அனைத்துக் காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி 750-க்கும் அதிகமான வாகனங்கள் மூலம் சுமாா் 8,500 டன் காய்கறிகள் கொண்டுவரப்பட்டன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விலை குறைந்துள்ளது.
இதன்படி, கடந்த வாரம் ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் ரூ. 40-க்கும், ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ. 25-க்கும், ரூ. 120-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், கேரட் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ. 25, பீன்ஸ் ரூ. 35, முள்ளங்கி ரூ. 20, பீட்ரூட் ரூ. 35, சவ்சவ் ரூ. 10, முட்டைகோஸ் ரூ. 10, கத்திரிக்காய் ரூ.10, வெண்டைக்காய் ரூ. 30, காராமணி ரூ. 25, சேனைக்கிழங்கு ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதுதவிர, முருங்கைக்காய் கிலோ ரூ. 60, சேப்பங்கிழங்கு ரூ. 30, காலிஃபிளவா் ரூ. 10, வெள்ளரிக்காய் ரூ. 10, பச்சை மிளகாய் ரூ. 25, பட்டாணி ரூ. 30, இஞ்சி ரூ. 30, அவரைக்காய் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

