ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்
சென்னை: சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில், திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
