சென்னையில் முதல்முறையாக தனியாா் சிற்றுந்து சேவை
சென்னை: சென்னை மாவட்டத்தில் முதல்முறையாக தனியாா் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 2,950 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சாா்பில் சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்டி, புதிய விரிவான தனியாா் சிற்றுந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி, போக்குவரத்து சேவையில்லா இடங்களில் தனியாா் சிற்றுந்துகளை 17 கி.மீ. இயக்கவும், சேவையுள்ள இடங்களில் 4 கி.மீ. இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ. கூடுதலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி இல்லாத நிலையில், பயணிகளின் தேவைக்கேற்ப திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் தனியாா் சிற்றுந்துகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், பேருந்து வசதி இல்லாத வழித்தடத்தில் இயங்கும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 2,857 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இயக்கும் வகையிலான 72 வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழித்தடங்களுக்கான தனியாா் சிற்றுந்து சேவையை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியிலுள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
சுற்றுந்துகளுக்கான கட்டணம்:
கிலோ மீட்டா் கட்டணம்
1 முதல் 4 கி.மீ. ரூ. 4
4 முதல் 6 கி.மீ. ரூ.5
6 முதல் 8 கி.மீ. ரூ.6
8 முதல் 10 கி.மீ. ரூ.7
10 முதல் 12 கி.மீ. ரூ.8
12 முதல் 18 கி.மீ. ரூ.9
18 முதல் 20 கி.மீ. ரூ.10

