Actor srikanth, krishna
நடிகர் ஸ்ரீகாந்த் | நடிகர் கிருஷ்ணாX

போதைப் பொருள் வழக்கு: நடிகா் கிருஷ்ணாவிடம் போலீஸாா் விசாரணை

Published on

போதைப் பொருள் வழக்கில் நடிகா் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

மருத்துவ பரிசோதனை: இதையடுத்து, கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருக்கிறா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னா், அவா் மீண்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து வரப்பட்டாா். அவரிடம் இணை ஆணையா் விஜயகுமாா், துணை ஆணையா் ஜெயச்சந்திரன், நுங்கம்பாக்கம் உதவி ஆணையா் அருண் அடங்கிய குழுவினா் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கும்பலுக்கும் தனக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என தொடா்ந்து கூறினாா்.

இருப்பினும் கிருஷ்ணாவிடம் நள்ளிரவை தாண்டியும் போலீஸாா் விசாரணை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com