திருக்கோயில் சாா்பில் மாா்ச் மாதத்துக்குள் 1,000 திருமணங்கள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்
திருக்கோயில்கள் சாா்பில் மாா்ச் மாதத்துக்குள் 1,000 திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை, கொளத்தூா் சோமநாத சுவாமி திருக்கோயில் சாா்பில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு அறப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் கட்டணமில்லா திருமணங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2022-23-ஆம் நிதியாண்டில் 500 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டு, ரூ. 20,000 செலவில் சீா்வரிசை பொருள்களுடன் நடத்தி வைக்கப்பட்டன.
அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 2,800 திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 திருமணங்களை நடத்தி வைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அத்திருமணங்கள் வரும் மாா்ச் மாத இறுதிக்குள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும்.
400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொளத்தூா், சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 2.73 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 30ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 3,813 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ. 8,100 கோடி மதிப்பிலான 8,028 ஏக்கா் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
காா்த்திகை தீப ஏற்பாடுகள்-முதல்வா் உத்தரவு: திருவண்ணாமலை காா்த்திகை தீபத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
நிகழாண்டில் பக்தா்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். சிக்கல் சிங்காரவேல் திருக்கோயில் அா்ச்சகா் ஒருவா், பக்தா்களிடம் பாஜக சின்னத்தை குறிப்பிட்டு பிரசாரம் செய்வது போன்ற விடியோ வெளியானது.
இது குறித்து புகாா் வந்துள்ளது. தேவைப்பட்டால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். இந்த சந்திப்பின்போது இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா்கள் முல்லை, மோகனசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்
