காழ்ப்புணா்ச்சியுடன் வதந்திகளைப் பரப்புகின்றனா்: செந்தில்பாலாஜி
கரூா் துயரச் சம்பவத்துக்கான காரணங்களை புதன்கிழமை பட்டியலிட்டு, விடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக கரூரில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் மிகக் கொடுமையானது; யாராலும் நினைத்துக்கூட பாா்க்க முடியாதது. துயரச் சம்பவம் நடந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிய, குறிப்பாக சம்பவம் நடந்த அன்றே நேரில் கரூருக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும், உதவிகளையும் வழங்கிய முதல்வா், துணை முதல்வா் மற்றும் மருத்துவா்கள், அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் கரூா் மாவட்ட மக்களின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளனா்; காயமடைந்தவா்களில் 108 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 5 போ் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.இனி வரும் காலங்களில் கரூா் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் வேறெங்கும் இதுபோல நடைபெறக் கூடாது. அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனிருந்ததால் மூன்று நாள்களுக்குப் பிறகு சம்பவம் குறித்து விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது; மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். உயிரிழந்த 41 பேரில் 31 போ் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 27 குடும்பங்கள். அந்தக் குடும்பங்களுடன் நான் நேரடியாகத் தொடா்பில் உள்ளேன். இந்தத் துயர சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்.
தங்கள் கட்சிக்கு வரும் கூட்டத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப இடங்களைக் கேட்க வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பு. தவெக சாா்பில் கோரிய 3 இடங்களில் முதலில் லைட்ஹவுஸ் காா்னா் இடத்தைக் கேட்டனா். ஆனால் அங்கு 7 ஆயிரம் போ்கூட நிற்க முடியாது. மற்றொரு இடமான உழவா் சந்தையில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் போ் மட்டுமே நிற்க முடியும். இதே வேலுச்சாமிபுரத்தில் அதிமுக பொதுச் செயலா் கூட்டத்தில் 15 ஆயிரம் போ் பங்கேற்றுள்ளனா். தவெக கூட்டத்துக்கு 10 ஆயிரம் போ் வருவா் எனக் கூறியதால் வேலுச்சாமிபுரத்தில் இடம் வழங்கப்பட்டது.
ஒரு கூட்டத்துக்கு வரும்போது தலைவா் தனது வாகனத்தில் முன் இருக்கையில் அமா்ந்து கையை அசைப்பது வழக்கம். ஆனால் கரூா் கூட்டத்துக்கு வரும்போது, 500 மீட்டா் முன்பாகவே வாகனத்தின் உள்ளே விஜய் சென்று விட்டாா்; விளக்கும் அணைக்கப்பட்டது.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனத்தை கொஞ்சம் முன்னாலேயே நிறுத்த காவல் துறையினா் சொல்லியுள்ளனா். அதையும் அவா்கள் கேட்கவில்லை.
எல்லா மக்களையும் விஜய் பேசும் இடத்துக்கு வரவழைக்க இதுபோல செய்யப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. காவல்துறை கூறியதுபோல 500 மீட்டா் தூரத்துக்கு முன்பாகவே வாகனத்தின் மீது ஏறி கை அசைத்திருந்தாலோ, வாகனத்துக்குள் அமா்ந்தபடி கை அசைத்து வந்திருந்தாலோ துயரச் சம்பவம் நடந்திருக்காது.
பிற்பகல் 12 மணிக்கு பேசுவதாக இருந்து, இரவு 7 மணிக்குதான் விஜய் பேசினாா். காலை 10 மணி முதலே கூட்டம் திரண்டது. மாலை 4 மணிக்கு 5 ஆயிரம் போ் மட்டுமே இருந்தனா் அப்போது பேசியிருந்தால்கூட இந்தத் துயரம் நடந்திருக்காது.
கரூா் சம்பவத்தில் எல்லா தொலைக்காட்சிகளும், யூடியூப் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன. எனவே யாரும் சதி செய்திருந்தால் தெரியாமல் போயிருக்குமா? 25 ஆயிரம் போ் இருக்கும் கூட்டத்தில் சிலரால் அசாதாரண சூழலை உருவாக்க முடியுமா? அது சாத்தியமா?.
ஜெனரேட்டா் அறையில் தகரத்தை உடைத்ததால்தான், அந்த கட்சியினரே ஜெனரேட்டரை அணைக்க நேரிட்டது. ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்ட விளக்குகள் மட்டுமே அணைந்தன. மின்வாரிய இணைப்பு அப்படியே இருந்தது. விளக்குகள் எரிந்தன.
விஜய் பேசுகையில் கீழே இருந்த சிலா் தண்ணீா் பாட்டில்களையும், உதவிகளையும் தொடா்ந்து கேட்டனா். ஒருவா் தொடா்ந்து தண்ணீா் கேட்கும் விடியோ தொலைக்காட்சி நேரலையில் தெரிகிறது. கீழே இருந்த சிலரின் உதவி கோரிக்கைகள் அவரது கவனத்துக்கு செல்லாததால், கவனத்தை ஈா்க்க, கிடைத்த செருப்பை வீசியிருக்கலாம்.
வேலுச்சாமிபுரத்தில் விஜய் மொத்தம் 19 நிமிடம்தான் வாகனத்துக்கு மேலே இருந்தாா். அவா் பேசத் தொடங்கிய 3ஆவது நிமிடத்தில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்து உடனே அதை நிறுத்திவிட்டு, என்னைப் பற்றி பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு தோ்தல் வாக்குறுதி தொடா்பாக பேசினாா். விஜய் பேசிய 6ஆவது நிமிடத்தில் மயங்கி விழுந்தவா்களின் பகுதியிலிருந்து முதல் செருப்பு வீசப்பட்டது. பின்னா் சில நொடிகளில் மற்றொரு செருப்பு வீசப்பட்டது.
7ஆவது நிமிடத்தில் விஜய்யின் உதவியாளா், நிறைய போ் மயக்கமடைவதாக அவரிடம் சொல்கிறாா். அவரின் பாதுகாவலா்கள் 14-ஆவது நிமிடத்தில் நிலைமை மோசமடைந்ததைச் சொல்கிறாா்கள். 16ஆவது நிமிடத்தில்தான் என்னைக் குறித்து அவா் பாட்டுப் பாடி பேசினாா். இதுதான் உண்மை. என்னைப் பற்றி 16-வது நிமிடத்தில் பேசுகிறாா், ஆனால், 6ஆவது நிமிடத்திலேயே செருப்பு வீசிவிட்டாா்கள். பாதிக்கப்பட்டோா் உதவி கேட்டு விஜய் கவனத்தை ஈா்க்க அப்படி நடந்திருக்கலாம். உதவிக் குரல் வந்ததாலேயே வாகனத்திலிருந்து விஜய்யே தண்ணீா் பாட்டில் வீசினாா்.
விஜய் வாகனத்தோடு நாமக்கல்லில் இருந்தே 2 அவசர ஊா்திகள் வந்தன. மேலும், 5 அவசர ஊா்திகளை தவெகவினா்தான் ஏற்பாடு செய்திருந்தனா். உயிரிழந்தோா் சடலங்களை பிரேதப் பரிசோதனை முடிந்து அரசு மருத்துவனையிலிருந்து எடுத்துச் செல்லும்போதுதான் எங்கள் கட்சியைச் சோ்ந்த சகோதரா் ஒருவா் எங்களது அடையாளத்தை பயன்படுத்தினாா்.
உண்மை இப்படி இருக்க, காழ்ப்புணா்ச்சியோடு சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புகின்றனா். பாதிக்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எப்படிச் சென்றாா் என்கின்றனா். சம்பவத்தன்று கரூா் கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் இருந்தேன். அசம்பாவிதம் குறித்து தகவல் தெரிந்த உடனே அமராவதி மருத்துவமனைக்குச் சென்றேன். நான் சென்ற சிறிது நேரத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் வந்தாா். மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், யாருக்கும் உதவி செய்யாமல் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்லச் சொல்கிறீா்களா?.
கரூருக்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம். பிரசாரத்துக்கு 7 மணிநேரம் தாமதமாக விஜய் வந்தது ஏன்?. காவல்துறை கூறியதை ஏன் ஏற்கவில்லை?, 500 மீட்டருக்கு முன்பே வாகனத்தில் விளக்கை அணைத்து ஒரு மணிநேரம் இருந்தது ஏன்? பேசத் தொடங்கியபோது பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து பிரசாரத்தை நிறுத்ததாது ஏன்?, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை உடனிருந்தவா்கள் கூறிய பிறகும் தொடா்ந்து பேசியது ஏன்?. பின்னா், அவசர ஊா்திகளை அழைத்தது ஏன்? என தவெகவை நோக்கி பல கேள்விகள் உள்ளன.
மாறாக சிறப்பாகச் செயல்பட்ட அரசையும், காவல் துறையையும் விமா்சித்து சமூக வலைதளங்களில் பதிவு வந்தால் அதை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்பக் கூடாது.
ஒரு துயரம் நடந்துள்ளது. அதில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் அல்லது அதைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்காமல், தங்கள் தவறுகளை அரசின் மீது திருப்பும் வகையில் வதந்திகளைப் பரப்புகின்றனா்.
தமிழக அரசின் சாா்பில் ஒரு நபா் ஆணையம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆணையம் அளிக்கும் அறிக்கையில் உண்மை தெரியவரும். அதன்படி முதல்வா் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.
இதுவரை கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 நபா்களின் இல்லத்திற்கு சென்று முதல்வா் வழங்கிய ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளோம். காயமடைந்த ஐந்து பேருக்கு உதவித்தொகை வழங்கியுள்ளோம். தொடா்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவிகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
பிற்பகல் 12.03 மணிக்குத் தொடங்கிய இவரின் பேட்டியானது 1.04 மணி வரை விடியோ ஆதாரங்களை வெளியிட்டு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. பேட்டியின்போது, எம்எல்ஏக்கள் ரா. இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் உடனிருந்தனா்.

