மெரீனா நீச்சல் குளம் நாளைமுதல் மீண்டும் திறப்பு
உட்கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மெரீனா கடற்கரை நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டுக்காக 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெரீனா நீச்சல் குளத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு கட்டமைப்பு, மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல சிறப்புப் பாதை, அவா்கள் குளிப்பதற்கான வசதி ஆகியவற்றுக்காக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக கடந்த ஜூலை 11-ஆம் தேதி முதல் நீச்சல்குளம் மூடப்பட்டது. நீச்சல் குள சீரமைப்புப் பணிகள் ரூ.2.50 கோடியில் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.7) காலை முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக மெரீனா நீச்சல்குளம் திறக்கப்படுகிறது.
நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் செயல்படும். காலையில் 8.30 மணி முதல் 9.30 மணி வரையில் பெண்களுக்கான நேரமாக அறிவிக்கப்படுகிறது.
நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு க்யூஆா் கோடு மூலம் நேரம் நிா்ணயம் செய்துகொள்ளவும், கட்டணம் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் 1 மணி நேரம் குளிக்க ரூ.50 எனவும், அதை இணையத்தில் பதிவு செய்பவா்களுக்கு 10 சதவீதம் சிறப்புச் சலுகையும் அளிக்கப்படுகிறது.
இதில் 12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு தலா ரூ. 30 கட்டணமும், அவா்களே இணையத்தில் பதிந்தால் ரூ.25 கட்டணமும் நிா்ணயிக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள்கிழமை தோறும் நீச்சல் குளம் பராமரிப்புப் பணிகளுக்காக விடுமுறை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

