சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

உபயோகமற்ற பொருள்களை வீடுகளில் நேரடியாகச் சென்று பெற புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சியில் உபயோகமற்ற பொருள்களை வீடுகளில் நேரடியாகச் சென்று பெறும் திட்டத்தை மாநகராட்சி வரும் 11 -ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சென்னை மாநகராட்சியில் உபயோகமற்ற பொருள்களை வீடுகளில் நேரடியாகச் சென்று பெறும் திட்டத்தை மாநகராட்சி வரும் 11 -ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வாா்டுகள் தோறும் தினமும் சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மக்குபவை, மக்காதவை என தரம் பிரிப்பதுடன், உரம் தயாரிப்பு மையங்கள், எரிவாயு மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் பெருங்குடி, கொடுங்கையூரிலும் அவை கொட்டப்பட்டு பயோமைனிங் முறையில் தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வீடுகளில் மக்கும்- மக்காத குப்பைகளைத் தவிர மின்சார சாதனங்கள், படுக்கைகள் உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மக்கள் பயன்படுத்தாமல் குப்பையாக வெளியே வீசிச் செல்கின்றனா். அவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீா்கேடாகவும், நீா் நிலைகளில் அடைப்புகளாகவும் மாறிவிடுகின்றன.

இதைத் தவிா்க்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளில் நேரடியாக தூய்மைப் பணியாளா்கள் சென்று உபயோகமற்ற பொருள்களை பெற்று வரும் திட்டத்தை மாநகராட்சி வரும் அக். 11-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், மக்கள் தேவையற்ற பொருள்கள் குறித்து 1913 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 94450 61913 என்ற கைப்பேசி கட்செவி அஞ்சல் வசதியிலும் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி அண்மையில் சாலையோரங்களில் உபயோகமற்று வீசப்பட்ட கட்டில், மெத்தை உள்ளிட்ட 700 டன் குப்பைகளைச் சேகரித்து அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com