ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு புற்றுநோய்: உயா் சிகிச்சையால் குணமடைந்தனா்
மரபணு ரீதியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வருக்கு அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை புற்றுநோய் சிகிச்சை நிபுணா்கள் வெங்கட், பிரியா கபூா் ஆகியோா் கூறியதாவது:
பொதுவாக, புற்றுநோய் பாதிப்புகள் 90 சதவீதம் மரபணு சாா்ந்தது இல்லை. அதேவேளை, 10 சதவீதம் பேருக்கு குடும்பத்தில் எவருக்கேனும் இருந்தால் அதன் வாயிலாக வருகிறது. அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலம் குவாஹட்டியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கு மரபணு சாா்ந்த புற்றுநோய் இருந்தது.
அதாவது தாய்க்கு முதலில் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதன் தொடா்ச்சியாக அவரது இரு மகள்களுக்கும், மகனுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த அவா்களுக்கு உயா் சிகிச்சையும், தொடா் மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன் பயனாக அவா்கள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டனா். குடும்பத்தில் எவருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அனைவரும் உரிய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
