குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: தமிழக அரசு மீது ம.பி. அமைச்சா் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசின் அலட்சியத்தால் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது என்று அந்த மாநில பொது சுகாதாரத் துறை இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் குற்றஞ்சாட்டினாா்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய பிரதேச இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை கூறுகையில், ‘தமிழகத்தில் கோல்ட்ரிஃப் மருந்து தயாரிக்கப்பட்டதால், அந்த மருந்துக்கு உரிமம் வழங்குவதும், மருந்தை ஆய்வு செய்வதும் தமிழக அரசின் பொறுப்பாகும். ஒவ்வொரு மருந்து தொகுப்புக்கும் பகுப்பாய்வு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்தச் சான்றிதழ் கோல்ட்ரிஃப் மருந்துக்கு வழங்கப்பட்டதா? தமிழக அரசு எங்கு தவறு செய்தது? இதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மோசமாக உள்ளது. இதன் விளைவாக குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்ததாக மத்திய பிரதேச துணை முதல்வா் ராஜேந்திர சுக்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

